Thursday, 23 September 2010
பிழைக்கத் தெரிந்தவர்கள்
டுபாய் நாட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஆசிய நாட்டு பிச்சைக்காரர் ஒருவரைப் பற்றி சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்கள் வாயிலாகக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.
உலகில் இன்று மிக இலகுவாகப் பணம் சம்பாதிக்கின்ற துறையாக பிச்சைத் தொழில் மாறிவிட்டது என்பதற்கு இந்த டுபாய் பிச்சைக்காரர் நல்ல உதாரணம்தான்.
ஆனால் அதைவிடவும் நம் கண் முன்னாலேயே பிச்சையெடுத்து மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே ஆயிரக் கணக்கான ரூபாய்களை "சம்பாதிக்கும்' பலரை கொழும்பிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நீங்கள் கண்டிருக்கக் கூடும்.
சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பஸ் வண்டி ஒன்றில் நானும் பயணித்தேன்.
சனநெரிசல்மிக்க குறித்த பஸ் வண்டி வெள்ளவத்தையை அண்மித்ததும் சிறிது கால் ஊனமுற்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறி பயணிகளைக் கும்பிட்டவாறே பிச்சையெடுக்கத் தொடங்கினார்.
தனது இயலாமையைச் சொல்லி அழாக் குறையாக பிச்சையெடுத்த அவரை நடத்துனர் இறங்கிச் சென்றுவிடுமாறு பல தடவை எச்சரித்தபோதிலும் அவர் அதனை சற்றும் பொருட்படுத்தவில்லை.
தனது சம்பாத்தியத்திலேயே குறியாக இருந்த அவர் பஸ் வண்டி தெஹிவளையைத் தாண்டுவதற்கு முன்பதாகவே (10 நிமிடங்களை விடக் குறைவான நேரம்தான்) மொத்தமாக சுமார் 400 ரூபாய்களை சம்பாதித்து விட்டார். அப்படியானால் அவரது முழு நாள் 'சம்பாத்தியம்'?
இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க காலத்தில் நானறிந்த வகையில் எந்த முதலீடுகளுமின்றி இலங்கையில் 10 நிமிடத்திற்குள் இவ்வளவு தொகையை சம்பாதிக்க முடியுமென்றால் அது நிச்சயம் இந்தப் பிச்சைத் தொழிலில் மாத்திரம்தான்.
என்ன? செய்யும் தொழிலை விட்டுவிட்டு பிச்சையெடுக்கலாம் போல எண்ணத் தோணுகிறதா?
23.09.2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment