Sunday, 6 February 2011

இப்படியும் ஒரு சகோதரி....



கொழும்பில் வசிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யப் போவதாகவும் அதற்காக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெற்றுத் தருமாறும் என்னை  வேண்டிக் கொண்டார்.

அன்றிரவே நான் குறித்த விபரங்களைப் பெற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் அவற்றைக் கொண்டு கொழு ம்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கும் வசதி படைத்த தனது அயலவர்களின் வீடுகளுக்கும் சென்று விபரத்தைக் கூறி நிவாரண உதவிகளைக் கோரியிருக்கிறார். அவர்களும் மனமுவந்து பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.

`நிவாரணம் சேர்க்கத்தான் பொது நிறுவனங்கள் இருக்கின்றனவே? நாம் நமது வேலையைப் பார்ப்போம்' என்றிராமல் தன்னால் இயன்ற உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்ய வேண்டும் என்று துணிவுடன் களமிறங்கியிருக்கும் அந்த சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.

Thursday, 6 January 2011

இப்படியும் ஓர் இறைச்சிக் கடைக்காரர்


கடந்த ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரை நிகழ்த்திய உலமா ஒருவர் இறைச்சிக் கடைக்காரர் ஒருவரைப் பற்றிச் சொன்ன சம்பவம் சபையோர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அண்மையில் ஹஜ் கடமைக்குச் சென்று வந்த குறித்த இறைச்சிக் கடைக்காரர் ஹஜ்ஜுக்குப் போன போதுதான் மாடு அறுக்கும் போது தக்பீர் சொல்லி அறுக்க வேண்டும் எனும் இஸ்லாமிய சட்டத்தை தெரிந்து கொண்டாராம்.

அப்படியானால் இதுவரை காலமும் அவர் அறுத்த மாடுகளைச் சாப்பிட்டவர்களின் நிலை என்ன? என்று கேட்டார் குறித்த உலமா.

கிட்டத்தட்ட 30 அல்லது 40 வருடங்கள் அவர் இறைச்சிக் கடைத் தொழிலை செய்து வருகிறாராம். ஆனால் அவருக்கு தான் செய்யும் தொழில் பற்றிய மிகவும் அடிப்படையான இஸ்லாமிய அறிவு கூட இல்லையென்றால் இந்த `அறிவு, ஆன்மிக வறுமை' நிலைக்கு யார் பொறுப்பு?

உலகக் கல்வி, மார்க்கக் கல்வி எனும் இரு வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட போதனா முறையைக் கொண்ட நமது சமூகத்தில் ஒரு சாரார் இப்படித்தான் மிகச் சிறிய விடயங்களைக் கூட அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்றி தமது முழு வாழ் நாளையுமே கழித்துக் கொண்டிருக்கிறார்கள்..... இதை யாரிடம் சொல்லி அழ?

Sunday, 26 December 2010

கடமை உணர்ச்சி

 
முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலை பற்றிப் பேசும் ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

அங்கு உயரதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்களும் புள்ளி விபரங்களும் எல்லோரினதும் கவனத்தை ஈர்த்தன.

அவர் தனது உரையில் நகைச்சுவையாகக் குறிப்பிட்ட ஒரு விடயத்தை உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்.

ஒரு முஸ்லிம் மாணவனின் தந்தையைப் பார்த்து ஆசிரியர் ஒருவர் "ஏன் உங்கள் மகன் முட்டை வியாபாரம் செய்கிறான்?" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தத் தந்தையோ " நீங்கள் அவனுக்கு  கொடுத்த முட்டைகளைத்தான் அப்போது அவன் விற்றுக் கொண்டிருக்கிறான்" என்றாராம்.

நீங்கள் ஒழுங்காகப் படிப்பிக்காததால்தான் அவன் இன்று முட்டை வியாபாரம் செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் அந்தத் தந்தை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்.

அந்த அதிகாரி இன்னுமொரு விடயத்தையும் சொன்னார்.

அவர் அண்மையில் ஒரு சிங்கள பாடசாலைக்கு மாலை வேளையில் சென்றிருக்கிறார். அங்கு ஒரு வகுப்பறையில் குழந்தை ஒன்று அழும் சப்தம் கேட்டிருக்கிறது. ஆச்சரியப்பட்டு போய்ப்பார்த்தபோது அங்கு ஒரு ஆசிரியை தனது கைக் குழந்தையை வைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம்.

தான் குழந்தையைப் பெறுவதற்காக எடுத்த விடுமுறையில் விடுபட்ட பாடத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே அவர் அவ்வாறு வகுப்பை நடத்தியிருக்கிறார்.

அந்த ஆசிரியையின் கடமை உணர்ச்சி எப்படியிருக்கிறது?

Thursday, 16 December 2010

திருட்டுத்தனம்


அண்மையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சகோதரர் ஒருவரை எதேச்சையாகச் சந்திக்கக் கிடைத்தது. ஒரு வெளியீட்டகத்தை நடத்தி வருபவர் அவர். 

அவர் என்னிடம் சொன்ன பின்வரும் விடயம் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியம் தரக் கூடியது.

"நான் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய பிரசாரகர் ஒருவரின் ஆங்கில மொழி மூல உரைகளடங்களிய இறுவட்டுக்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறேன். நான்தான் அதற்கு குரலும் கொடுக்கிறேன். இதனை குறித்த பிரசாரகரின் அனுமதியுடன்தான் நாம் செய்கிறோம்.

அண்மையில் நாங்கள் வெளியிட்ட ஒரு தமிழ் மொழி மூல இறுவட்டை இலங்கையிலுள்ள ஒரு தஃவா பிரசார அமைப்பினர் எமது நிறுவனத்தின் பெயரை அழித்து விட்டு அவர்களது பெயரைப் பொறித்து இலங்கை முழுவதும் விற்பனை செய்திருக்கிறார்கள். ஒரு இலங்கை நண்பரின் வீட்டில் குறித்த இறுவட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதுதான் என்னால் இந்தத் `திருட்டுத்தனத்தை' கண்டுபிடிக்க முடிந்தது."

தஃவா செய்யத்தான் வேண்டும். ஆனால் திருட்டுத்தனமாகச் செய்து குறுக்குவழிகளில் சுவர்க்கம் போக முனையக் கூடாது அல்லவா?

Thursday, 9 December 2010

இப்படியும் ஒரு கல்நெஞ்சன்

இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு வயதான முஸ்லிம் சகோதரர் எமது அலுவலகத்திற்கு வந்திருந்தார். தமது குடும்பத்தில் நடந்த ஒரு அலவச் சம்பவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அவரது மனைவிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை  செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமது மகன் தனது சிறுநீரகம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளார். ஆனால் அவர் அதற்காக சுமார் 60 ஆயிரம் ரூபா பணத்தைக் கேட்டிருக்கிறார்.

இவர்களும் அதைப் பெரிதுபடுத்தாது பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த  `அன்பு மகனோ' பணத்தைப் பெற்றுக் கொண்டு சிறுநீரகத்தை தர மறுத்திருக்கிறார்.

தனக்கு வழங்கப்பட்ட பணம் போதாது என்றும் மேலதிகமாக பணம் தருமாறும் அவர் கேட்டிருக்கிறார்.

தற்போது பெற்றோர் வசித்து வரும் வீட்டை விற்றாவது தனது தொழிலுக்காகப் பணம் தருமாறு கேட்டிருக்கிறார்.

மகனின் இந்தப் பிடிவாதம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காரணமாக இதுவரை அந்தத் தாய்க்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை.

மகனின் இந்த செயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்தத் தந்தை பத்திரிகை வாயிலாக பொது மக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தருமாறு கோரவே எமது அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

இப்படியும் ஒரு கல்நெஞ்சன் இருக்கிறானே?

Monday, 6 December 2010

அரசியல் பண்புகள்


அண்மையில் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிடச் சென்றிருந்தேன்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தனது சகாக்கள் சகிதம் அங்கு உணவருந்த வந்திருந்தார்.

ஏற்கனவே அந்த ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குறித்த அரசியல்வாதியின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இவருக்குமிடையில் சமகால அரசியல் விடயங்கள் குறித்து பேச்சு வளர்ந்தது.

சமகால அரசியல் போக்குகள் குறித்து அதிகம் சலிப்படைந்தவராகக் காணப்பட்ட அந்த அரசியல்வாதி தான் அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் தற்போது அரசியல் என்பது போட்டி, பொறாமை, நயவஞ்சகத்தனம், குத்து வெட்டுக்கள் நிறைந்த ஒன்றாக மாறிவிட்டமையே தனது முடிவுக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

உண்மையில் எல்லா அரசியல்வாதிகளும் இவரைப் போன்று இன்றைய அரசியலை நன்கு விளங்கி வைத்திருக்கிறார்கள்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை. அவர்கள் அரசியலை விடுவதாகவோ அல்லது இந்த `அரசியல் பண்புகள்' அவர்களை விடுவதாகவோ இல்லை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

Thursday, 2 December 2010

இப்படியும் ஓர் இபாதத்


 சென்ற வாரத்துக்கு முந்திய வாரம் `ரீலோட் இலஞ்சம்'  பற்றி எழுதியிருந்தேன்.

இந்த வாரம் புனித மக்கா நகரிலேயே இலஞ்சம் கொடுத்து ஹஜ் செய்த நமமவர்களைப் பற்றிய ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்ல நினைக்கிறேன்.

கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில் இடம்பெற்ற குத்பா பிரசங்கம் ஒன்றில்தான் இந்த சம்பவத்தை இமாமவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இலட்சக் கணக்கான யாத்திரிகர்கள் மத்தியில்  தாமும் முண்டியடித்துக் கொண்டு தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால் நமது நாட்டைச் சேர்ந்த சில யாத்திரிகர்களோ கடமைகளின் போது முன்வரிசையில் இடம்பிடிப்பதற்காக அங்குள்ள ஏற்பாட்டாளர்களுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு வேறு நாட்டு யாத்திரிகர்களுக்குச் சொந்தமான வாகனங்களில் ஏறிச் சென்று முன்னணியில் இடம்பிடித்துக் கொண்டார்களாம்.

நமது நாட்டின் பெருமையை அந்தப் புனித மண்ணிலும் நிலைநாட்டிய பெருமை இந்த `ஹாஜி'களைத்தான் சாரும் அல்லவா?