Sunday, 6 February 2011
இப்படியும் ஒரு சகோதரி....
கொழும்பில் வசிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த சகோதரி ஒருவர் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்யப் போவதாகவும் அதற்காக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெற்றுத் தருமாறும் என்னை வேண்டிக் கொண்டார்.
அன்றிரவே நான் குறித்த விபரங்களைப் பெற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் அவற்றைக் கொண்டு கொழு ம்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கும் வசதி படைத்த தனது அயலவர்களின் வீடுகளுக்கும் சென்று விபரத்தைக் கூறி நிவாரண உதவிகளைக் கோரியிருக்கிறார். அவர்களும் மனமுவந்து பல உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
`நிவாரணம் சேர்க்கத்தான் பொது நிறுவனங்கள் இருக்கின்றனவே? நாம் நமது வேலையைப் பார்ப்போம்' என்றிராமல் தன்னால் இயன்ற உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்ய வேண்டும் என்று துணிவுடன் களமிறங்கியிருக்கும் அந்த சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.
Thursday, 6 January 2011
இப்படியும் ஓர் இறைச்சிக் கடைக்காரர்
கடந்த ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரை நிகழ்த்திய உலமா ஒருவர் இறைச்சிக் கடைக்காரர் ஒருவரைப் பற்றிச் சொன்ன சம்பவம் சபையோர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அண்மையில் ஹஜ் கடமைக்குச் சென்று வந்த குறித்த இறைச்சிக் கடைக்காரர் ஹஜ்ஜுக்குப் போன போதுதான் மாடு அறுக்கும் போது தக்பீர் சொல்லி அறுக்க வேண்டும் எனும் இஸ்லாமிய சட்டத்தை தெரிந்து கொண்டாராம்.
அப்படியானால் இதுவரை காலமும் அவர் அறுத்த மாடுகளைச் சாப்பிட்டவர்களின் நிலை என்ன? என்று கேட்டார் குறித்த உலமா.
கிட்டத்தட்ட 30 அல்லது 40 வருடங்கள் அவர் இறைச்சிக் கடைத் தொழிலை செய்து வருகிறாராம். ஆனால் அவருக்கு தான் செய்யும் தொழில் பற்றிய மிகவும் அடிப்படையான இஸ்லாமிய அறிவு கூட இல்லையென்றால் இந்த `அறிவு, ஆன்மிக வறுமை' நிலைக்கு யார் பொறுப்பு?
உலகக் கல்வி, மார்க்கக் கல்வி எனும் இரு வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட போதனா முறையைக் கொண்ட நமது சமூகத்தில் ஒரு சாரார் இப்படித்தான் மிகச் சிறிய விடயங்களைக் கூட அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்றி தமது முழு வாழ் நாளையுமே கழித்துக் கொண்டிருக்கிறார்கள்..... இதை யாரிடம் சொல்லி அழ?
Subscribe to:
Posts (Atom)

