Thursday, 30 September 2010

தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!

பாவக் கறைகளைப் போக்கிக் கொள்வதற்காகத்தான் நாம் பள்ளிவாசலுக்குச் செல்கிறோம். ஆனால் ஒரு சிலர் தம் மீது பாவக் கறைகளை அள்ளிப் பூசிக் கொள்ளவே பள்ளிவாசலுக்கு வருகிறார்கள் என்பதை நினைக்கையில் கவலையாகவிருக்கிறது.

கடந்த திங்கட் கிழமை கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு லுஹர் தொழுகைக்காகச் சென்றிருந்தேன். தொழுதுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது பெறுமதி வாய்ந்த எனது காலணிகளைக் காணவில்லை.

பள்ளிவாசல் சிற்றூழியரிடம் சென்று முறையிட்டேன். `அதெல்லாம் சகஜமப்பா' என்ற பாணியில் கையை விரிக்க மாத்திரம்தான் அவரால் முடிந்தது.

"சில தினங்களுக்கு முன்னரும் இரண்டு சோடி காலணிகள் காணாமல் போய்விட்டன தம்பி. இது தொடர்ந்து நடக்கிறது" என்றார் அவர். அங்கு கூடி நின்றவர்களும் ஆளைப் பிடித்து `சாத்த' வேண்டும் என்றார்கள்.

ஆனால் எனக்கு மாத்திரம் அந்த இடத்தில் கோபம் வருவதற்கு பதிலாக ஒரு கவிதைதான் வந்தது.

"பள்ளிக்குத் தொழச் சென்றேன்.  
செருப்பைக் காணவில்லை.  
தொழ வந்தவர்கள்
திருடியிருப்பார்கள்...!
இல்லை... இல்லை...
திருட வந்தவன்
தொழுதுவிட்டுப் போயிருப்பான்...!!"

எங்கேயோ எப்போதோ படித்த இந்தக் கவிதை எனக்குள் இப்போதும் பத்திரமாய் பதிந்திருக்கிறது... என் செருப்பும் திருட்டுப் போகும்வரை...

(இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்தால் என்ன தெரிகிறது....? இது ஒன்றும் செருப்பு விற்கும் கடையில்லை... தென்கொரியாவில் பார்க் எனும் 59 வயது செருப்புத் திருடனால் வீடுகளிலும் மத தலங்களிலும் ஹோட்டல்களிலும் திருடப்பட்ட 1700 சோடி செருப்புகள்தான் இவை... அப்பாடா...இதை விட நம்ம நாட்டு திருடர்கள் பரவாயில்லை போலும்...?)

Thursday, 23 September 2010

பிழைக்கத் தெரிந்தவர்கள்


டுபாய் நாட்டில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஆசிய நாட்டு பிச்சைக்காரர் ஒருவரைப் பற்றி சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்கள் வாயிலாகக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்.

உலகில் இன்று மிக இலகுவாகப் பணம் சம்பாதிக்கின்ற துறையாக பிச்சைத் தொழில் மாறிவிட்டது என்பதற்கு இந்த டுபாய் பிச்சைக்காரர் நல்ல உதாரணம்தான்.

ஆனால் அதைவிடவும் நம் கண் முன்னாலேயே பிச்சையெடுத்து மிகக் குறுகிய நேரத்திற்குள்ளேயே ஆயிரக் கணக்கான ரூபாய்களை "சம்பாதிக்கும்' பலரை கொழும்பிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் நீங்கள் கண்டிருக்கக் கூடும்.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பஸ் வண்டி ஒன்றில் நானும் பயணித்தேன்.

சனநெரிசல்மிக்க குறித்த பஸ் வண்டி வெள்ளவத்தையை அண்மித்ததும் சிறிது கால் ஊனமுற்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறி பயணிகளைக் கும்பிட்டவாறே பிச்சையெடுக்கத் தொடங்கினார்.

தனது இயலாமையைச் சொல்லி அழாக் குறையாக பிச்சையெடுத்த அவரை நடத்துனர் இறங்கிச் சென்றுவிடுமாறு பல தடவை எச்சரித்தபோதிலும் அவர் அதனை சற்றும் பொருட்படுத்தவில்லை.
தனது சம்பாத்தியத்திலேயே குறியாக இருந்த அவர் பஸ் வண்டி தெஹிவளையைத் தாண்டுவதற்கு முன்பதாகவே (10 நிமிடங்களை விடக் குறைவான நேரம்தான்) மொத்தமாக சுமார் 400 ரூபாய்களை சம்பாதித்து விட்டார். அப்படியானால் அவரது முழு நாள் 'சம்பாத்தியம்'?

இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க காலத்தில் நானறிந்த வகையில் எந்த முதலீடுகளுமின்றி இலங்கையில் 10 நிமிடத்திற்குள் இவ்வளவு தொகையை சம்பாதிக்க முடியுமென்றால் அது நிச்சயம் இந்தப் பிச்சைத் தொழிலில் மாத்திரம்தான்.

என்ன? செய்யும் தொழிலை விட்டுவிட்டு பிச்சையெடுக்கலாம் போல எண்ணத் தோணுகிறதா?
23.09.2010

Friday, 17 September 2010

'இயக்க வெறி'

ரமழான் மாதத்தின் இறுதிப் பத்தில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான அமல்களில் ஒன்றாக இஃதிகாப் கருதப்படுகிறது.

நமது நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதும் ஏராளமானோர் இவ் அமலில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வதும் வழமை.

இந்த வருடம் ரமழானின் இறுதிப் பத்தில் கொழும்பிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாப் இருந்த சில சகோதரர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் கவலைக்குரியது மட்டுமல்ல நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமாகும்.

குறித்த பள்ளிவாசலில் இஸ்லாமிய இயக்கம் ஒன்றைச் சேர்ந்த சுமார் 15 சகோதரர்கள் இம் முறை இஃதிகாப் அமலில் ஈடுபட்டிருந்தனர்.

சரியாக நோன்பு 28 அன்று நண்பகல் இப் பள்ளிவாசலுக்கு வந்த இன்னுமொரு இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த சிலர் இஃதிகாப் இருந்த சகோதரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரியதுடன் அவர்களைத் தாக்குவதற்கும் முற்பட்டுள்ளனர்.

இவ் விவகாரம் பொலிஸ் நிலையம் வரை செல்ல பிரச்சினையைப் பெரிதுபடுத்த விரும்பாத இஃதிகாப் இருந்த சகோதரர்கள் அங்கிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். ஆசையோடு செய்த அமலை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற கவலை இன்றும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

"இயக்க வெறி' பிடித்து அலையும் இவர்கள் தமது இயக்கத்தை வளர்க்கிறார்களோ இல்லையோ இஸ்லாத்தை அழிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

16.09.2010

இப்தார்

ரமழான் மாதம் வந்துவிட்டால் "இப்தார்' நிகழ்வுகளுக்குப் பஞ்சமிருக்காது.
முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதவர்கள் கூட தமது அன்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவதற்காக இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

கடந்த வாரம் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வுக்கு வருமாறு அழைப்பு வந்திருந்தது.
ஏதாவது ஒரு ஆடம்பர ஹோட்டலில் நடக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் அழைப்பைப் பிரித்தேன்.

ஆச்சரியமாகவிருந்தது. திம்பிரிகஸ்யாயவிலுள்ள அனாதைப் பெண் பிள்ளைகள் தங்கியிருக்கும் பாத்திமா நலன்புரி நிலையத்தில்தான் குறித்த இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எந்த அரசியல் பிரமுகர்களோ, முக்கயஸ்தர்களோ இதற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை.
அந்த நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் பெண் பிள்ளைகளின் அன்றைய தினத்திற்கான உணவுச் செலவையும் அமெரிக்க தூதரகமே பொறுப்பேற்றிருந்தது.

அமெரிக்க தூதுவரும் நோன்பு பற்றியும் அங்கு தங்கியிருக்கும் பிள்ளைகளின் குறை நிறைகள் பற்றியும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த வாரம் கொழும்பில் மற்றுமொரு இப்தார் நடந்தது. இரண்டு முஸ்லிம் பெரியார்களின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இப்தாருக்கான மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?
18 இலட்சங்கள்!!!

அவர்கள் எங்கே?
நம்மவர்கள் எங்கே?

09.09.2010

ஜும்ஆ நடத்தலாமே...?

நோன்பு காலம் வந்துவிட்டால் முஸ்லிம் சிறைக் கைதிகள் மீதான அக்கறை பலருக்கும் வந்துவிடுவது என்னவோ உண்மைதான்.

"முஸ்லிம் கைதிகள் நோன்பு நோற்க ஏற்பாடு', "முஸ்லிம் கைதிகளுக்கு உலருணவுப் பொருட்கள் விநியோகம்', "முஸ்லிம் கைதிகள் தொழுகையில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன'.... என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகள் கூட அதிகம் வெளிவரும்.

 சில தினங்களுக்கு முன்னர் சந்தித்த ஊடக நண்பர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

தென் மாகாணத்தைச் சேர்ந்த சிறைச்சாலை ஒன்றிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பை முன்னிட்டு உலருணவுப் பொருட்களை வழங்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தானும் சில தினங்கள் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், குறித்த சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்த கருத்தைச் சொன்ன போது கவலையாக இருந்தது.

"இப்பொழுது இந்தச் சிறையில் வெள்ளிக் கிழமை (ஜும்ஆ) தொழுகை நடத்தக் கூடிய அளவுக்கு முஸ்லிம் கைதிகள் இருக்கிறார்கள். வேண்டுமானால் தொழுகைக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்பதுதான் அந்த சிறை அதிகாரியின் கூற்று.

முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களுக்கு இந்த அதிகாரியின் கூற்றும் நல்ல உதாரணம்தானே?    

02.09.2010

அக்கறைசாலிகள்

கடந்த வாரம் கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.

முஸ்லிம் தனவந்தர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த இக் கலந்துரையாடலில் பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த தனவந்தர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை அங்கு கூடியிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களை வழங்கும் நோக்கில் தான் ஒரு முஸ்லிம் பாடசாலை அதிபரை அணுகியதாகவும் ஆனால் அதற்கு குறித்த அதிபர் அளித்த பதில் தன்னை கவலையடையச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

"" நீங்கள் ஏன் இப்படி ஒரு சிலருக்கு மாத்திரம் இரகசியமாக புலமைப்பரிசில் வழங்க வேண்டும்? 5000 பிள்ளைகளுக்கு 5 கொப்பிகள் வீதம் பகிரங்கமாக வழங்கினால் நீங்கள் "பப்ளிசிட்டி' ஆகலாம்தானே?'' என்பதுதான் அந்த "அதிபர்' அளித்த பதில்.

இப்படிப்பட்ட அக்கறைசாலிகளை வைத்துக் கொண் டா முஸ்லிம் சமூகத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வது?

26.08.2010

பக்தி

ரமழான் மாதம் வந்தவுடன் நம்மில் அதிகமானோர் "ஷைத்தான் பெட்டி'' என்றழைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகளை மூட்டை கட்டி வைத்து விடுவது என்னவோ உண்மைதான். அதற்கப்பால் சிலர் தாம் பயன்படுத்தும் கேபிள் தொலைக்காட்சி சேவைகளையும் ஒரு மாத காலத்திற்கு துண்டித்துவிடுவார்கள்.

இம் முறை ரமழான் ஆரம்பித்தது முதல் இலங்கையில் கேபிள் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்று பின்வருமாறு விளம்பரம் ஒன்றை தொடராக ஒளிபரப்பியது.

" புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கேபிள் தொலைக்காட்சி சேவைகளைத் துண்டிப்பவர்கள் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்த 500 ரூபாய் சேவைக் கட்டணமாக அறவிடப்படும்'' என்பதுதான் அந்த விளம்பரம்.

ரமழானில் மாத்திரம்தான் முஸ்லிம்கள் தொலைக்காட்சி பார்க்க மாட்டார்கள். ரமழான் முடிந்ததும் மீண்டும் "ஷைத்தான் பெட்டி'யைத் திறந்து 11 மாதமும் சின்னத் திரைக்குள்ளும் சினிமாவுக்குள்ளும் மூழ்கி விடுவார்கள் என்பதை தொலைக்காட்சி நிறுவன ங்கள் நன்கு புரிந்து வைத்திருப்பதன் வெளிப்பாடுதானே இந்த விளம்பரம்?

19.08.2010

கதை அளத்தல்

கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.

குறித்த நிகழ்வு இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் 8 மணிக்கே ஆரம்பமாகியது. நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த அமைப்பின் செயலாளர் ஆற்றிய அறிமுக உரை மாத்திரம் சரியாக 50 நிமிடங்களுக்கு நீண்டது. தொடர்ந்து வந்த அமைப்பின் பொருளாளரோ அங்கு வந்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரை மணி நேரமாக "அறிவுரை' வழங்கினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் தன்பாட்டுக்கு நேரத்தை நீட்டிக் கொண்டே சென்றார். அதன் பின்னர் அதிதி உரை, பாராட்டைப் பெற்றவரின் ஏற்புரை.... என தொடர்ந்து ஈற்றில் பங்குபற்றுனர்களின் கருத்துக்கும் இடம்வழங்கப்பட அதனைப் பயன்படுத்தி ஒரு அரசியல்வாதியும் எழுந்துநின்று தன்பாட்டுக்கு அளக்கத் தொடங்கினார்.

மொத்தத்தில் இரவு 10.30 மணிக்குத்தான் நிகழ்வு "இனிதே' நிறைவுபெற்றது. நம்மவர்களுக்கு "மைக்' மாத்திரம் கிடைத்துவிட்டால் போதும்; காலம் நேரம் புரியாமல் கதை அளக்கத் தொடங்கிவிடுவார்கள்.

உலகில் பிரபல்யம்பெற்ற மனிதர்கள் கலந்து கொண்டு உரையாற்றும்  நிகழ்வு ஒன்று வாராந்தம் அமெரிக்காவில் நடக்கிறது.

சரியாக 20 நிமிடங்களுக்குள் மாத்திரம் தாங்கள் சொல்ல வரும் செய்தியை மிகக் கச்சிதாகச் சொல்லிவிடுகிறார்கள் அவர்கள்.

 வேண்டுமானால் www.ted.com  எனும் தளத்துக்கு ஒரு முறை விஜயம் செய்து பாருங்கள்...

12.08.2010